Saturday, November 22, 2008

மனதைத்தொட்டவள்


ராகவன் அந்த பூங்காவில் அமர்ந்து கொண்டிருந்தான். எதிரே விசாலமான கடற்கரை. எங்கும் நீல வன்ணம் தாங்கி ஆர்பரித்துக் கொண்டிருந்தது. அருகே ஒட்டினார்ப்போல வானம் இருண்டிருந்தது. இரண்டிற்க்கும் துளி கூட சம்பந்தமில்லை. ஆனால் இயற்கை அவற்றை இணைத்துப் பார்த்து மகிழ்கிறது. மரபு மீறி மனிதன் அதன் தொடர்பு தேடி பயணப்பட்ட போதெல்லாம், இருகரம் நீட்டி அவனை வரவேற்று ஒவ்வொரு கண்டமாய் காட்டி சிரித்திருக்கிறது. இதோ தன் முழங்கால் மடக்கி அமர்ந்திருக்கும் மலருக்கும், தனக்கும் கூட எந்த சம்பந்தமுமில்லை தான். ஒருவேளை இயற்கை தான் அவர்களை இணைத்ததோ.
"என்ன... ராகவா.... பயங்கர சிந்தனை...." மலர் அவனது சிந்தனையை கலைக்கிறாள்.
"ஒன்னுமில்லே... நம்மை பத்தி நினைச்சிகிட்டேன். ஆமா உன் கணவர் சம்பத் என்ன சொல்றார்?...உன் முடிவுக்கு சம்மதம் தெரிவிச்சுட்டாரா...?
""அவர்கிட்டே சொல்லி ரெண்டு மாசம் ஆறது. அவர் என்னடான்னா உன்னை கடைசியா கேட்டுக்க சொல்லிட்டார்...." மலர் இவன் முகம் பார்த்து சிரிக்கிறாள்.
ராகவன் அவளை தீர்க்கமாய் பார்க்கிறான். பின் ஓடிவரும் அலைகள்பால் தன் பார்வையை திருப்பி விட்டவன், சற்று நேரம் கழித்து மலரினை நோக்கி, " இதுக்கெல்லாம் நான் தகுதியானவனா மலர். எனக்கு ரொம்பவும் பிரமிப்பா இருக்கு. நேத்து தான் உன்னை சந்திச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ளே ரெண்டு வருஷம் ஓடிடுத்து......"
மலர் அவன் கையை ஆதரவாய் பற்றிக்கொள்கிறாள். அந்த தொடுதல்களில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் ராகவனுக்கு புரிகிறது. " ராகவா....எனக்கு உன்கிட்டே பிடிச்சதே, உன்னோட தன்னம்பிக்கையும், எழுத்தும் தான். என்ன இல்லே உன்கிட்டே. உன்னை நேரில் காட்டின ஆண்டவனுக்கு நான் கடமை பட்டிருக்கேன்..
"தேங்க்ஸ் மலர்... ஆனாலும் இந்த அன்புக்கு நான் முழு தகுதியானவனா தெரியலே. அது சரி லெட்டர். குடுத்திட்டியா ?...""
இன்னும் இல்லே. நாளைக்கு எழுதி குடுத்துட்டா போச்சு. But மேனஜரை எப்படி Face பண்றதுன்னுதான் தெரியலை. என்மேல ரொம்ப நம்பிக்கை வச்சு நிறைய பொறுப்புகளை கொடுத்தார்.""
So what மலர். இதுவரைக்கும் அந்த கடமைகளை நீ சரிவர தானே செய்துவரே...""
இல்லே ராகவா...திடுதிப்புன்னு போய் லெட்டர் குடுத்தா....""
மலர். உன் பேருக்கு ஏத்த மாதிரிதான் நீ இருக்கே. ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கனும் நீ. வாழ்க்கையில் சில தேடல்கள் அவசியம். உனக்கு இது துவக்கம்னு நான் நெனைக்கிறேன்."
மலர் சிரிக்கிறாள். மலரினும் மேலாய் பட்டது அவனுக்கு. மெல்ல ராகவன் அவளை முதன் முதலாய் சந்தித்த அந்த முதல் சந்திப்பை, அந்த தித்திக்கும் நிகழ்வை சற்று பின்னோக்கி பார்க்க ஆரம்பிக்கிறான்.
இந்தியாவெங்கும் தன் கிளை பரப்பிக்கிடக்கும் அந்த நிறுவனத்தில் கம்பியூட்டர் பிரிவில் அவன் சேர்ந்த அன்று முதன் முதலாய் அவளை சந்தித்தான். மலர். பெயருக்கு ஏற்றார் போல இருந்தது அவள் செய்கைகள். மானேஜரின் அந்தரங்க காரியதரிசி அவள். எனவே எல்லாருக்கு கொஞ்சம் பயம். ராகவன் முதல் நாளே வணக்கம் சொன்னான். பதிலுக்கு அவளும் கை குவித்துப் போனாள்.
ராகவன் நினைத்தது போல அவள் நட்பு அவ்வளவு சீக்கிரம் கிடைக்கவில்லை. அதற்காய் அவன் கவலைப்படவும் இல்லை. அலுவலகத்தின் போதும், இன்ன பிற எதிர்பாரா சந்திப்புகளின் போதும் ஒரு மெல்லிய புன்னகையோடு சரி. அத்துடன் எல்லாம் முடிந்து போகும். எந்நேரமும் கம்பியூட்டரும், போனுமாயிருப்பாள். மீட்டிங்கின்போது மேனஜரின் பேச்சுக்களை அழகாய் குறிப்பெடுத்துக் கொள்வாள்..அடுத்த இந்தாவது நிமிடம் அந்த குறிப்புகள் அவனது கம்ப்யூட்டரில் மின்னும். அசுரத்தனமான வேகம். அதைப்போலத்தான் ராகவனும் தனது கடின உழைப்பால் வெகு சீக்கிரமே பெயரெடுக்க ஆரம்பித்தான். அடிக்கடி ஆபிஸ் விஷயமாய் வெளியூர் செல்ல ஆரம்பித்தான்.ஒருநாள் மலர் இவனிடம் பேசினாள்.
நாள் கூட ராகவனுக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. ஆகஸ்ட் 10. அன்று வழக்கம் போல ஆபிஸ் நுழைந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி தன் இருக்கையில் அமர்ந்தவன், தன்முன் ஏதோ நிழல் விழ, நிமிர்ந்து பார்த்தான். தன் எதிரே மலர் நிற்பதை பார்த்து, சற்று திகைத்து பின் ,
" எஸ்...." என்றான்.
அப்போது தான் மலர் அவனிடம் முதன் முதலாய் பேசினாள்.
" sorry... ராகவன். ஒரு சின்ன ஹெல்ப்... என் சிஸ்டம் திடீர்னு hang ஆயிடுச்சி. ஒரு அர்ஜெண்டா ஒரு லெட்டர் டைப் பண்ணனும். கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?....."
" O yes.... அதுக்கென்ன...."
என்று எழுந்து நடந்தவன், மலர் தன்னை பின் தொடராமல் போகவே, திரும்பிப் பார்த்து என்ன என சைகையால் கேட்டான்.
" இல்லே... நீங்க சரி பண்றவரைக்கும், உங்க சிஸ்டத்தை நான் யூஸ் பண்ணிக்கவா....?
என்றாள் தயக்கத்தினூடே.....
அன்று முதல் அவர்கள் நட்பு தொடர்ந்தது. கம்யூட்டரில் இருந்த ராகவனின் கவிதைகள் அவளூக்கு மிகவும் பிடித்து போகவே, அவர்களது நட்பு இன்னும் இறுக்கமானது. பத்திரிக்கைகளில் அவன் தொடர்ந்து எழுதி வருவதை கேள்விப்பட்டு, அவள் ரசித்த கவிதைகள், கதைகள் அவனுடையது என தெரிந்ததும் மலர் பிரம்மிப்படைந்தாள். தன் கணவன் சம்பத்தை ராகவனுக்கு பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தாள். கூடிய சீக்கிரமே அவன் அவர்களது குடும்பத்தில் ஒருவனாகிப் போனான். அவர்களது ஒரே செல்லப்பெண் ஆர்த்தியோ, இவனுடன் பசை போல ஒட்டிக்கொண்டாள். தன் மழலை மாறாத குரலால் இவனை ராவா என பெயர் சொல்லி அழைத்தாள்.
இங்கு ஆர்த்தியை பற்றி சொல்லியே ஆக வேண்டும். பார்த்த முதல் சந்திப்பிலேயே, பலநாள் பழகியவளைப் போல, இவன் அழைத்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். செல்லமாய் முத்தம் கொடுத்தாள். வீட்டில் இருந்த அத்துனை பொருட்களையும் காட்டினாள். பின் அடுத்து வந்த சந்திப்பில் இவன் நீட்டும் காட்பரிஸை லபக்கென வாங்கி கடகடவென தின்றுமுடித்து சிரிப்பாள். தன் எச்சில் ஒழுகும் வாயால் இவனுக்கு முத்தம் வேறு. அப்போதெல்லாம் ராகவன் தன் கன்னம் துடைக்க மாட்டான். மலர் அவளை கண்டிக்க முற்படும் போதெல்லாம் அவன் அவளை தடுத்து விடுவான்.
" அவளை தடுக்காதே மலர்..... எனக்கு இது பிடிச்சிருக்கு. இந்த முத்தம் இப்படியே இருக்கட்டும்...
"சம்பத் இவன் கைபற்றி கலகலவென சிரித்து, சரியான பார்ட்டி நீங்க ராகவன்...." என்பார்.
ஒருநாள் ராகவனுக்கு உடம்பு முடியாமல் போய் விட்டது. ஒவ்வொரு வெளியூர் பயணத்தின் போதும் தான் எச்சரிக்கையாக இருந்தும், ஒருசில சமயங்களில் இதுபோல நடந்து விடுகிறது. சரியான ஜுரம். ஆபிஸுக்கு நாலு நாள் லீவு போட்டு விட்டு சுருண்டான். இரண்டாவது நாளே மலர் அவன் வீடு தேடி வந்து விட்டாள். இவன் நிலை கண்டு பதறி, உடன் திலீப்பிற்க்கு போன் செய்தாள். அவன் வரும் வரையில் வீட்டினை ஒழுங்கு படுத்தியதில் செலவிட்டாள். வீடு பெருக்கி, அலங்கோலமாய் கிடந்தவைகளை அதனதன் இடத்தில் வைத்து, சுடுதண்ணீர் வைத்து, காப்பி போட்டு அவனுக்கு தந்து, இப்படி அத்தனை வேலைகளையும் சட்டென முடித்தாள். இடையில் ஒரு வார்த்தை கூட ராகவனிடம் பேசவில்லை.
அடுத்த அரை மணி நேரத்தில் திலீப், ஆர்த்தியுடன் ஒரு கூடை நிறைய பழங்களுடன் வந்திறங்கினான். அவனை பார்த்ததுதான் தாமதம், மலர் பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள். சகட்டு மேனிக்கு ராகவனை திட்டித் தீர்த்ததும் கடைசியில் ஓவென அழ ஆரம்பித்துவிட்டாள்.ராகவன் எவ்வளவோ எடுத்து சொன்னான். ஆனால் அவளிடம் அவன் சமாதானம் எடுபடவில்லை. சற்று நேரம் கழித்து திலீப் ராகவனிடம் பேச ஆரம்பித்தான்.
" தப்பா எடுத்துக்காதீங்க ராகவன். இந்த பொம்பளைங்க எல்லாம் அழகான ராட்சஸிங்க. மனசுல எதையும் வெச்சிக்க மாட்டாங்க. ஆமா ஏன் உங்களுக்கு உடம்பு சரியில்லைங்கறத தெரியப்படுத்தலே. என்னை போட்டு உண்டு இல்லேன்னு பண்ணிட்டா தெரியுமா ? நாங்க ஏதாச்சும் சொல்லிட்டமா..? "
ராகவன் பதறி அவன் கை பற்றுகிறான். மலரை பார்த்து கண்களால் நன்றி சொன்னான். பின் உடைந்த குரலில் பேச ஆரம்பித்தான்.
" தப்பா எடுத்துக்காதீங்க திலீப். ரெண்டு வயசிருக்கும் அப்போ எனக்கு. ஒரே நாளில் என் அப்பாவும், அம்மாவும் ஒரு ஆக்ஸிடெண்டுலே போயிட்டாங்க. தனிமரமா நின்னேன். சொந்தகாரங்க யாரும் முன்வரலே. சின்ன வயசிலேயே அப்பா, அம்மாவை முழுங்கினவன்னு என்னை யாரும் ஏத்துக்க முன் வரலே. நானே போய் அனாதைகள் இல்லத்துலே சேர்ந்தேன். அப்போலேர்ந்து யார் உதவியும் எதிர்பார்க்காமே வளர பழகிக்கிடேன். இப்போ இந்த அன்பை என்னால தாங்க முடியாமே தவிக்கிறேன். இது பத்திரமா இருக்கணுமுன்னு அனுதினமும் ஆண்டவன்கிட்டே பிராத்திக்றேன்...."
" சரி விடுங்க ராகவன். மலர் வெண்ணீர் போட்டு விட்டிருக்கா. உடம்ப லேசா துடச்சிவிட்டுக்கலாம். நான் ஹெல்ப் பண்ணவா.?
" இல்லே... நானே துடச்சிக்கறேன்...."
இவர்களின் உரையாடலை பார்த்துக்கொண்டிருந்த ஆர்த்தி மெல்ல ராகவனிடம் வந்து,
" ராவா... உம்பு சரியில்லையா....."
" ஆமாண்ட செல்லம்..... மாமாவுக்கு ஜுரம்...."
" அப்போ.. வா... டாக்டர் மாமாகிட்டே போலாம். ஊசி போட்டுட்டு சாமி கும்பிட்டா சரியாய்டும்..."
ராகவன் அவளை இருக்காமாய் அணைத்துக்கொள்கிறான். பின் கண்களில் ஈரமுடன்,
" அதெல்லாம் வேண்டாம். ஒரே ஒரு முத்தம் குடுடா செல்லம்...மாமாவுக்கு ஜுரமெல்லாம் ஓடியே போய்டும்......"
இப்போது மலர் அவர்களை இடைமறித்து,
" டீ ஆர்த்தி, நம்பிடாதே....இதெல்லாம் வேஷம்....."
ராகவன் கண்களில் நீர் வர சிரிக்கிறான். சற்று நேரம் கழித்து ஒருவர் பின் ஒருவராய் சிரிப்பில் சேர்ந்து கொள்கிறார்கள். ஆர்த்தியும் கூட சேர்ந்து சிரிக்கிறாள். அடுத்த இரண்டொரு நாட்களில், ராகவன் இயல்பு நிலைக்கு சீக்கிறமே திரும்பி, வேலைக்கும் செல்ல ஆரம்பித்தான்.
" என்ன, பலமான சிந்தனை....."
ராகவன் நினைவு கலைந்து, மலரின் முகம் பார்த்து சிரிக்கிறான். பின்,
" நம்ம நட்பை கொஞ்சமா திரும்பி பார்த்தேன். ரொம்ப ஆச்சர்யமாயிருக்கு.... அப்பா... மூனு வருஷம் ஓடிடுத்து அதுக்குள்ளே...."
" ஆமாமா... ஆனா நீங்க மட்டும் மாறவே இல்லே..."
" Let it be மலர். சிலபேர் இப்படி இருக்கறதுலே தப்பில்லே. சரி பெங்களூர் எப்போ புறப்படனும்...?"
" may be next week.... திலீப் வீடெல்லாம் பார்த்து வச்சுட்டார். என்ன எங்க எல்லாருக்கும் உங்க நினைப்புத்தான். ஆர்த்திதான் எப்படி இருக்க போறாளேன்னு கொஞ்சம் கவலையா இருக்கு. ரொம்ப செல்லமா வளர்த்திட்டீங்க அவளை நீங்க. என்ன உடம்புக்கு முடியலேன்னா ஒரு சுடுதண்ணி வெக்க தெறியுமா உங்களுக்கு. கல்யாணம்னா காத தூரம் ஓடறீங்க. நாங்க என்னதான் செய்யறது..."- குரலில் கொஞ்சமாய் உஷ்ணம் தொனிக்கிறது மலருக்கு.
ராகவன் மெல்லமாய் அவளை பார்த்து சிரிக்கிறான். பின் தன் கைகளில் ஒட்டியிருந்த மணல் துகள்களை தட்டி விட்டபடி,
" இது நாள் வரைக்கும் எனக்கும் அந்த எண்ணம் இல்லாமே தான் இருந்தேன். ஆனா இப்போ நீ சொல்ற பொண்ணை கட்டிக்க முழு மனதா சம்மதிக்கிறேன். உனக்கு பிடிச்ச பொண்னா பாரு. வந்து தாலி கட்டறேன். போதுமா..?
"மலர் ஆச்சர்யத்தில் வாய் பிளக்கிறாள். தன் கைகளிரண்டையும் மாறிமாறி கிள்ளிக்கொள்கிறாள். பின்,
" ஐயோ... நிஜமா இது. திலீப் இதை கேட்டா ரொம்ம சந்தோஷப்படுவார்...."
" ஆமா மலர். அவரை மாதிரி ஒரு பிரண்டு கிடைக்க நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கனும். நீங்க எல்லாரும் சேர்ந்துதான் என்னை மாத்தி இருக்கீங்க. முக்கியமா ஆர்த்தி. அவளை பிரிஞ்சு எப்படி இருக்க போறேன்னுதான் எனக்கு தெறியலே. என்ன பன்னலாம் மலர் ? "
" என்னை கேட்டா. நாய்குட்டி மாதிரி உங்களையே சுத்திச்சுத்தி வரா. நீங்கதான் ஒரு வழி சொல்லனும். "
தூரத்தே அவர்களின் உரையாடலை அரைகுறையாய் கேட்டபடி வந்த திலீப், இவர்களை நெருங்கியதும், அதுவரையில் அவன் கைகளில் சிறைபட்டிருந்த ஆர்த்தி, தன் கைகளை விடுவித்துக்கொண்டு, ஒரு பட்டாம்பூச்சியாய் பறந்தோடி வந்து ராகவனை அணைத்து கொள்கிறாள். ராகவனும் தான். தயாராய் எடுத்து வைத்திருந்த காட்பரிஸை பார்த்ததும், உடன் ஆர்த்தியின் கண்கள் சிரிக்கிறது. உரிமையாய் அதை அவனிடமிருந்து பிரித்தவள்,
" தாங்க்யூ... ராவா..."
" அவ்வளவு தானா.... "
" இரு வரேன். சாக்லெட்லாம் திண்ணு முடிச்சுட்டுதான் முத்தம் தருவேன்..."
" ம்.. ம்.... " -- ராகவன் போலியாய் அழுகிறான்.
என்ன சொல்றா உங்க பிரெண்ட். என கேட்டபடி ஸ்னேகமாய் அருகில் வந்து அமருகிறான் திலீப்.
" அடுத்த வாரம் தானே புறப்படறீங்க."
" ஆமா... ராகவன். but, அதுக்கு முன்னாடி உங்ககிட்டே கொஞ்சம் பேசனும்..."
" நீங்களுமா. well... என்ன விஷயம் திலீப்.."
" ரொம்ப தெளிவா யோசிக்கிரீங்க. என்ன புதுசா பேசப் போறேன். எல்லாம் உங்க கல்யாண விஷயமாதான்...."
இப்போது மலர் அவர்களை மறித்து, " என்னங்க ஸார் இப்போதான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டார். இனி நீங்களே பேசுங்க. அதுதான் சரியாயிருக்கும்.
" இப்போ பொறுப்பு ரொம்ப கூடிப் போயிடுச்சி ராகவன். சரி எப்படிப் பட்ட பொண்ணு வேணும்...'
" பெரிசா குணம் ஒன்னும் தேவையில்லே. தாய் - மகன் உறவுன்னா என்ன, சகோதர பாசம்னா என்னன்னு இனம் பிரிக்க தெரியனும். ஏன்னா, உன்னோட அன்பிலே அம்மா பாசத்தையும், திலீப்போட ஸ்னேகத்துலே ஒரு நல்ல சகோதரனின் அன்பையும் ஒருசேர பாக்கறேன். அந்த அன்புக்கு பங்கம் ஏற்படுத்தாத எந்த புதிய உறவும் எனக்கு சம்மதம். "ராகவனிடமிருந்து தெளிவாய் வந்து விழுகின்றன வார்த்தைகள்."
Well.... நீங்க சொன்ன இந்த நிமிஷம், இந்த செகண்ட் எனக்கு ஒரு பொண்ணு ஞாபகத்துக்கு வர்ரா. but... அவளை உங்களுக்கு பிடிக்குதான்னு நீங்கதான் சொல்லனும்....."
" Is it... யாரது.....? " ராகவன் சற்றே ஆவலாய் கேட்டு முடிக்கும் முன் திலீப் சட்டென சொல்கிறான்.
" அஞ்சனா..... மை சிஸ்டர்....."
திடீரென வானம் வெளுகிறது. ராகவனின் வாழ்க்கையும் தான்.

கதவு திறந்தது

மூன்று நாட்களாய் இடைவிடாது மழை பெய்துகொண்டிருக்கிறது. ராகவனின் மனதுக்குள்ளும் தான். மஞ்சு இந்த மூன்று நாட்களாய் அறுபட்ட நாணாய் கிடக்கிறாள். உடல் மெலிந்து, வலுவிழந்து, தேற்ற முடியாத தேவதையாய் கிடக்கிறாள். அழுது அழுது கண்கள் வீங்கிக் கிடக்கிறாள். இந்த மூன்று நாட்களும் ராகவன் விடுப்பிலிருக்கிறான். மஞ்சுவை அணுஅணுவாய் பாதுகாத்து வருகிறான். பாவிமகள் ஏதேனும் செய்துகொண்டுவிடுவாள். இங்கேயங்கே என அவளை எங்கும் தணியே செல்ல விடுவதில்லையவன். கூடவே செல்கிறான். ஆனால் அவள்தான் தேறியபடில்லை.
பாவம் அவளும் பெண்தானே. தாய்மையை உணரத்துடிக்கிறாள். முடியாது தவிக்கிறாள். அவளின் இந்த நிலை காணும்போது, ராகவனுக்கும் தானாய் கண்களில் கண்ணீர் திரளுகிறது. ஆனால் அதை அவள் அறியாவண்ணம் சிரமப்பட்டு மறைக்கிறான். அவன் அழுதாள் அவளின் நிலை மேலும் பரிதாபமாகிப்போகும். பூவைப் போன்றவள் அவன் மஞ்சு. அவளை அவன் அதிகம் நேசித்தான்.
மெலியதாய் போன் மணி அடிக்கிறது. அதை அதிகம் ஒலிக்க விடாது, ராகவன் எடுக்கிறான்.
' ஹலோ... '
' ராகவா.... நான் சிவா பேசறேண்டா... '
' ம்.. சொல்லு... '
' சிஸ்டர் இன்னமும் அழுதுகிட்டுதான் இருக்காங்களா... ? '
' ஆமாம் . சிவா ரொம்பவும் ஒடிஞ்சி போயிட்டா... தேத்தறது கஷ்டமாயிருக்கு... '
' oh!... come on டா.... நீதான் அவங்களுக்கு ஆறுதல் சொல்லனும்.. அது உன்னாலே மட்டும்தான் முடியும்... '
' I know... அதான் சின்சியரா try பன்னிட்டிருக்கேன்.. '
' ஆண்டவன் இருக்கான். நமக்குன்னு ஒருவழி காட்டாமலா போய்டுவான்... anyway... take care ..டா '
' நானும் அந்த நம்பிக்கையிலேதான் இருக்கேன். சரி வச்சுடட்டுமா... அவ எந்திருச்சுட்டா...இன்னும் மூனு நாள் லீவ் சொல்லிடு...பை '
மெல்லமாய் ரெசிவரை சாத்திவிட்டு ராகவன் படுக்கையறைக்குள் நுழைந்தான். அதற்க்குள் தூக்கம் கலந்து எழுந்திருந்த மஞ்சு சுவற்றில் மட்டிவைத்திருந்த குழந்தை படங்களையே வெறித்தவாறு இருந்தாள். ராகவன் மெல்லமாய் அவள் அருகில் சென்று அமர்ந்தபடி,
' மஞ்சும்மா.... வா.. சாப்பிடலாம்... காலையிலிருந்தே நீ ஒன்னும் சாப்பிடவேயில்லை.... '
' ஆமா... எனக்கு சாப்பாடு ஒன்னுதான் இப்போ குறைச்சல்... ' விரக்தியாய் மஞ்சுவிடமிருந்து குரல் வருகிறது.
ராகவன் இன்னமும் அவளை நெருங்கியமர்ந்து, ' ஏம்மா .. இப்படியெல்லாம் பேசறே... '
' அப்படித்தான் பேசுவேன்...ஒரு புள்ளை பெத்துத்தர வக்கில்லை எனக்கு. இதுல சோரு ஒன்னுதான் குறைச்சல். என்னை இப்படியே விட்டிங்கன்னா.. நான் சீக்கிரமாவே செத்துபோயிடுவேன்... ' ஆவேசமாய் மஞ்சுவிடமிருந்து பதில் வருகிறது....
ராகவன் தன் கைகளால் அவள் முகத்தை ஏந்தியபடி,
' மஞ்சு, நமக்கு குழந்தை பிறக்காட்டா இப்போ என்ன ?. உனக்கு நான், எனக்கு நீன்னு இருந்துட்டு போவோம். ஒன்னுமட்டும் நல்லா தெறிஞ்சிக்கோ, எனக்கு நீ முக்கியம். உன் சிரிப்பு முக்கியம். நீ இப்படியே இருந்தியானா நானும் சீக்கிறமே செத்துபோயிடுவேன்.. '
மஞ்சுவின் கண்களில் கரகரவென நீர் திரளுகிறது. உதடு துடிக்கிறது. ஏதோ
சொல்ல வருகிறாள். ராகவன் மெல்லமாய் அவள் வாய்பொத்தி,
' செல்லம்... புருஷன் பொண்டாட்டி புள்ளை பெத்துக்கிறதுதான் வாழ்க்கையின்னு உனக்கு யார் சொல்லி கொடுத்தது. மனசு ஒத்து வாழறதுதான் தாம்பத்தியம். பிள்ளைகள் ஒரு அங்கம். நான் மறுக்கலை. ஆனா எனக்கு என் பிள்ளைகளை விட, என் பொண்டாட்டி நிம்மதி முக்கியம். ... '
மஞ்சு ராகவனின் தோள்களில் சாய்ந்து கொள்கிறாள். இருக்கமாய் அவனை கட்டிக்கொள்கிறாள். காற்று புக முடியாத இறுக்கம். அப்படி அவனை வெறிவந்தார்போல கட்டிக்கோள்வது பிடிக்கும் அவளுக்கு. மெல்ல விசும்பலின் ஊடே அவளிடமிருந்து வார்த்தை வெளிப்படுகிறது,
' நிறைய ஆசை வச்சிருந்தேன் ராகவா... குறைஞ்சது மூணு பிள்ளையாவது பெத்துக்கணும். முதலாவது பெண் பிறக்கனும். அவளுக்கு நந்தினின்னு பெயர் வைக்கனும். மூனும் உன்ன மாதிரியே இருக்கனும். அடிக்கடி நீ என்னை பார்த்து, எல்லாமே என் ஜாடையின்னு என்னை கேலி பன்னனும், ஒருநாள் நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி உன் மடியிலேயே உயிர் விட்டிடனும், அப்போ நீயும், நம்ம மூனு பிள்ளைகளும் சேர்ந்து என்னை மயானத்துக்கு எடுத்துப்போகனும்... இப்ப.... எல்லாம் கனவாய் போயிடுத்து.. ராகவா...இந்த பாவி வயிறு அதுக்கு குடுத்து வைக்கலே.... ' மெல்ல விசும்பலாய் பேச ஆரம்பித்தவள் பின் ஓங்காரமாய் பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். வயிற்றில் பலம் கொண்ட மட்டும் தன் கைகளால் அறைந்துகொண்டாள்.
ராகவன் மஞ்சுவை கலியாணம் பன்னி இதோடு ஐந்து ஆண்டுகள் ஓடிப்போய் விட்டன.முதல் பார்வையிலேயே அவனை ஆட்கொண்டாள் மஞ்சு. நெஞ்சுக்குள் சம்மணம் போட்டு உட்கார்ந்து அடம்பிடித்தாள். அவனும் அவளை சீக்கிறமே கலியாணம் செய்துகொண்டுவிட்டான். இதோ இன்றுவரை வாழ்க்கை இனித்துக்கொண்டுதானிருக்கிறது. ஆனால் ஆண்டவன் மட்டும் ஏனோ அவர்களுக்கு புத்திர பாக்கியத்தை தரவில்லை. அவளும் மிகுந்த நம்மிக்கையுடனேயிருந்தாள். ஆயிரமாயிரம் கோயில்கள் ஏறியிறங்கினாள். அறையெங்கும் குழந்தைகளின் படங்களை மாட்டி வைத்தாள். எல்லாம் போன வாரம் வரைதான். டாக்டர் முடிவாய் சொல்லிவிட்டார். இனியவள் கர்ப்பம் தரிக்க முடியாதென. பாவம் மிகவும் நொந்துபோய்விட்டாள். அந்த வளமான உடம்புக்குள் ஏனோ ஒரு குழந்தைக்கு இடமில்லாமல் அவளின் கர்ப்பப்பை மட்டும் சுருங்கிக்கிடக்கிறது.
ராகவன் அவளை மேலும் இறுக்கமாய் அணைத்துக்கொள்கிறான். அவனையறியாமல் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடி அவள் கைகளை நனைக்கிறது. உடன் அவள் பதறி எழுகிறாள். பாய்ந்து அவன் கண்களை துடைக்கிறாள். ராகவன் அழுது அவள் இதுவரையில் பார்த்ததில்லை. சடாரென தன் அழுகையை நிறுத்தி, அவனை பார்த்து,
' வா... சாப்பிடலாம்... ' என அவன் கைகளை பிடித்து தரதரவென இழுத்தபடி சென்று டைனிங் டேபிளில் உட்காரவைத்து அவனுக்கு பவ்யமாய் பரிமாறுகிறாள்.
ராகவன் மெல்லமாய் உணவை மென்றபடி ஆழ்ந்த சிந்தனையிலாழ்கிறான்.
ஏதாவது செய்ய வேண்டும்....
நாட்கள் மெல்லமாய் நகர்கிறது. மறுபடியும் போன்மணி அடிக்கிறது. இப்போதும் ராகவன் தான் எடுக்கிறான்.
' ஹலோ '
ராகவனின் குரலை கேட்டதும் படு உற்ச்சாகமாய் சிவா பேச ஆரம்மிக்கிறான்.
' மச்சான்... ஒரு சந்தோஷமான விஷயம்டா....உனக்கு நல்ல காலம் பிறந்தாச்சு...ஆண்டவன் கண்களை திறந்துட்டான்... '
எதிர்முனையில் சிவா பேசிக்கோண்டே போக ராகவன் சந்தோஷத்தின் உச்சிக்கே போகிறான்.
' சிவா... தாங்ஸ்டா... இதோ இப்பவே வர்ரேன்... உடனே காரியம் முடிஞ்சுடுமா.... ? '
' yes - டா... நான் எல்லாத்தையும் பேசிட்டேன்...நீ வந்து ஒரு கையெழுத்து போட்டா போதும், காரியம் முடிஞ்சிடும்... '
' நீ போனை முதல்லே வை.. இதோ நான் ஒரு மணிநேரத்துலே அங்கேயிருப்பேன். அதுக்கு முன்னே நர்மதாவை வீட்டுக்கு அனுப்பிவை. அவளுக்கு துணையா விட்டுட்டு வர்ரேன்....சரியா.... '
' done '
போனை வைத்துவிட்டு நெடுநாட்களுக்குப் பிறகு வெகு ஆனந்தமாய் குளியலறை சென்று குளித்தான் ராகவன். அவன் குளித்து முடிப்பதற்க்கும், நர்மதா வருவதற்க்கும் சரியாய் இருந்தது, மெல்ல அவள் அருகே சென்று, மஞ்சு அறியாவண்ணம் ,
' நர்மதா.. அவளுக்கு ஒன்னும் தெறியவேணாம். ஒருமணி நேரத்துலே நாங்கள் வந்துவிடுகிறோம்... ' என்றவன் மெல்ல மஞ்சுவிடம் சென்று,
' மஞ்சு எனக்கு வெளியே கொஞ்சம் வேலையிருக்கு, ஒரு ஒருமணிநேரத்துலே திரும்பிடுவேன். அதுவரைக்கும் உனக்கு நம்ம நர்மதா துணையயிருப்பா.... '
சரேலென வெளியேறுகிறான் ராகவன்.
அன்னை மேரி மாதா அனாதைகள் இல்லம்.
வாசலில் புன்னைகையோடு சிவா. ராகவனை பார்த்ததும் ஆவலாய் ஓடிவந்து கட்டிக்கொள்கிிறான். ராகவனின் கண்களில் கண்ணீரை கண்டதும்,
' டேய் ராகவா.. அழாதே... இனி உன் வாழ்க்கையிலே அழுகைக்கே இடமில்லே... '
' தேங்ஸ்டா....இந்த நன்றியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்.... '
' உனக்கு ஒன்னுன்னா அது என்னக்கும்தான். ஏன்னா நம்ம நட்புக்கு ஆழம் அதிகம்.. சரிசரி வா உள்ளே போகலாம்... '
' குழந்தை இப்போ எங்கிருக்கிறா...நான் அவளை பார்க்கனுமே.... '
' கவலைப்படாதே... குழந்தை சும்மா தேவதையாட்டமா இருக்கா... பார்க்கத்தானே போறே... இப்போ பாதரை பார்த்து பேசிவிட்டு வந்திடலாம்... வா... '
உள்ளே சென்று பாதிரியாரின் எதிரில் அமர்கின்ரரை¢. காத்திருந்ததுபோல பாதிரியார் பேச ஆரம்பிக்கிறார்.
' சாதாரனமா இவ்வளவு சின்ன வயசிலே நாங்க யாருக்கும் தத்து கொடுக்கறதில்லே. ஆனா Mr. சிவா உங்களைப்பற்றியும், உங்கள் மனைவியைப்பற்றியும் சொன்னதும் எனக்கு மறுக்க தோணலே. ஆண்டவன் சித்தம் அதுவானால் அதை தடுக்க நான் யார். இந்த குழந்தை என்னிடம் வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அதற்க்குள் தன் அழகு கொஞ்சும் சிரிப்பால் எல்லோரையும் தன் வசம் வைத்துக்கொண்டாள். கர்த்தரோட கிருபை அவளுக்கு நிறைய இருக்கு. அவளுக்கு உங்களால் ஒரு வளமான வாழ்க்கை அமையும் என்ற
நம்மிக்கையுடன் நான் உங்களுக்கு இந்த ஆண்டவனுடைய புத்திரியை மனப்பூர்வமாய் தத்து கொடுக்கிறேன். இந்த பாரமில் ஒரு கையெழுத்து போடுங்கள். கூடவே குழந்தைக்கு ஒரு பெயர் வைத்துவிடுங்கள்.
' நந்தினி... '
சட்டென சொல்கிறான் ராகவன்.
' குட்நேம்... '
' நல்லது.. ஒரு மாதத்திற்க்குள் சட்டப்படி சுவீகாரம் செய்துகொள்ளுங்கள். '
' சரி பாதர்.. அப்புறம் இந்த 50,000 / - க்கான செக்கை தாங்கள் அவசியம் ஏற்றுக்கொள் ள வேண்டும்.... '
' ஆண்டவனின் சித்தம் அதுவானால் அதை தடுக்க நான் யார்.. நன்றி.. '
' பாதர் குழந்தையை நான் பார்க்கலாமா...அவளை இப்பவே என்கூட அழைச்சிகிட்டு போகலாமா.. ? ' ராகவன் ஏறக்குறைய அழும் நிலைக்கு வந்துவிட்டிருந்தான்.
' oh !... my jesus... இந்த குழந்தை மிகவும் குடுத்து வைத்திருக்கிறது... ஆண்டவன் இந்த குடும்பத்தை காப்பாராக... ' என்றவர் உள்நோக்கி குரல் கொடுக்க, அடுத்த இந்தாவது நிமிடம் ஒரு பொன்னிற தேவதை ராகவன் கைகளில் தவழ்கிறது....
அந்த நிமிடம் ராகவனின் வாழ்நாளிள் மறக்க முடியாத தருணம். அந்த 1 1/2 வயது தேவதை ராகவனின் கைகளில் தவழ்கிறது. குண்டு குண்டாய் கன்னத்தோடு தன் முல்லைப்பல் தெறிய ராகவனை பார்த்த்து அனியாயத்திற்க்கு சிரிக்கிறது. ராகவனும் சிரிக்கிறான். தன் கண்களில் கண்ணீர் வர சிரிக்கிறான். அவளை நெஞ்சோடு நெஞ்சாய் அணைத்து முத்தமழை பொழிகிறான். பின் அவளை பாதிரியாரின் கால்களில் போட்டு சாஷ்டாங்கமாய் தானும் விழுகிறான்.
' எங்களை ஆசீர்வதியுங்கள் பாதர்....இவள் நீண்ட காலம் வாழ வேண்டும்.... '
பாதர் அவர்களை ஆசீர்வதிக்கிறார்.
சிவாவும், ராகவனுமாய் சேர்ந்து நேரே கோயிலுக்கு சென்று நந்தினியின் பெயரில் அர்ச்சனை செய்கிறார்கள். பின் கடைவீதிக்கு சென்று நந்தினிக்கு புதுதுணிமனிகள் வாங்கி அவளுக்கு அணிவிக்கிறார்கள். கூடவே கனமான கொலுசும்...பின் வீடு வந்து தன் நிலைப்படியில் நந்தினியை நிறுத்தி, தன்னைப்பார்த்து புன்னகைக்கும் அவளின் தாடையை தன் கைகளில் ஏந்தியபடி,
' நந்தினி.... உள்ளே அம்மா இருக்காங்க பாரு.... '
நந்தினி ராகவனை பார்த்து தன் பொக்கைப்பல் காட்டி சிரிக்கிறாள். பின் உரிமையாய் தன் பிஞ்சுக்கால் பதிய தத்தக்கா, பித்தக்கா என நடந்து, விழுந்து பின் சுதாரித்து மெல்ல எழுந்து ஒரு தேவதையைபோல நடக்கிறாள். அவளின் நடை ஒரே நேர்க்கோடாய் மஞ்சுவின் அறையை நோக்கி இருக்கிறது. ராகவன் ஒருமுறை ஆழமாய் மூச்சையிழுத்து விடுகிறான். பின் வீட்டின் கதவுகள் அனைத்தையும் திறந்து, விளக்குகள் அனைத்தினையும் போட்டு விடுகிறான். வீடே ஒளிவெள்ளமாய் மாறிப்போகிறது.
ஆம்... இனியவன் வாழ்க்கையில் இருட்டுக்கு அங்கே இடமில்லை.

**********

Thursday, November 6, 2008

தாயுமானவள்



சகி !

ஒரு முழம் தாலி கட்டி - நான்உலகளந்த களைப்பிலிருக்கிறேன்!...நீயோ,
அதிகாலை தொடங்கி - அந்தி சாயும்வரைக்கும்
அனைத்துமாகி நிற்கிறாய்!...
முகம் சுளித்ததில்லை...
கண்ணோரம் நீர் கசிந்ததில்லை.. ..
களைத்துப் படுத்ததில்லை -
நீகண்ணயர்ந்து நான் பார்த்ததில்லை!.. ..
வேலை நிமித்தம் நான் வெளிக்கிளம்புகையில்,
வாயிற்புறம் வந்து நீ வழியனுப்பி வைக்கிறாய்!....
உன் கண்ணோரம் வழிகின்ற காதலில்,
முற்றிலுமாய் கரைந்து போகிறேன் நான்!..
உண்மையில் சகி - உன்னில் என்னை
தொலைத்து வெகு நாட்களாகும்!..
முன்னாளில் சிறு புள்ளியாய் - பின்னாளில்
பூமி மறைத்த பேரண்டமாய் நீ!....
உண்மை சொல் சகி! -
என்னில் என்ன வேண்டும் உனக்கு?..
ஊரார் மெச்ச நான் வழிப்படுத்தவில்லை,
ஒரு நாளும் உன்னோடு நான் வெளிக்கிளம்பவில்லை,
உனக்காய் உண்மையில் ஒன்றுமே யோசித்ததில்லைதான்!..
ஆனால் நீயோ - எப்போதாகிலும் என்னிலிருந்து
வெளிப்படும்புன்னகையிலும்,
முத்தங்களிலும் கரைந்து போகிறாய்!....
ஆயினும் என்ன - அனைத்துமானவள் நீ
ஆகவே என்னைக் கொஞ்சமேனும் நீ சகி!....