Wednesday, August 12, 2009

நில நடுக்கம்


அன்பானவர்களே !
வணக்கம் . இந்த நில நடுக்கம் என்பது எப்போது நம்மை தாக்க ஆரம்பித்தது ?
மனிதன் முதன் முதலாய் இயற்கையை முந்த முற்பட்ட போதா ? அல்லது இயற்கைக்கு எதிராக கொடிபிடித்த போதா . இயற்கை என்பது முற்றிலும் மனிதனுக்கு தானே தவிர வேறு எதற்குமில்லையே . பின் என் இந்த விபரீதங்கள்
"நீ விதை கொண்டு வா ..
நான் தண்ணீர் தருகிறேன் ..
நாம் இருவரும் மனிதம்
போற்றுவோம் ! "
இந்த வரிகள் நம்முள் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்றால் இல்லை என்று தான் சொல்ல தொன்றுகிறது .
மனிதன் நீருக்காயும் , நிலத்துகாயும் பூமியை என்று சுரண்ட ஆரம்பித்தானோ அன்றே ஆரம்பித்து விட்டது. எங்கோ ரிக்டர் அளவு கோளில் எழு என்றால் இங்கே அத்துனையும் நாசமாகிறது. அந்த மானும் , ஜப்பானும் இதற்கு நுழைவு வாயில்கள் . பனிப்பாறை ஒருபக்கம் உருகி ஓடுகிறது, மறு பக்கம் சுனாமி பேரழிவை உண்டு பண்ணுகிறது.
மனிதன் செத்து நாளாகிறது. மனிதம் போற்றுவதை தவிர நமக்கு வேறு வழி இல்லை.
idhayaa

Friday, July 31, 2009

என்னை பற்றி ..


எழுத்து என்பது எப்போது என்னுள் எழுந்தது . பதில் தெரியாத இந்த கேள்விக்கு என்னில் இதுவரையில் பதிலேதும் இல்லை. அது எங்கே எப்படி என்னை தொற்றிக் கொண்டது?
எழுத்து எனக்கு வசப்பட்டதா ?
இல்லை எழுத்துக்கு நான் வசப்பட்டேனா ?
முதன் முதலில் நான் எதை தான் எழுதினேன் ?
ஆயிரமாயிரம் கேள்விகள் என்னுள்

Friday, December 19, 2008

நந்திதா என்றொரு சடலம் .......

கதைக்குள் நுழையும் முன்..
வணக்கம்.
இக்கதை எனக்குள் நிகழ்ந்துபோன ஓர் வேதனை நிகழ்வு. நமது இந்திய பாரம்பரியத்தில் கற்புக்கு என ஓர் மிகப்பெரிய இடம் இருக்கிறது. அதன் முக்கியத்துவத்தை இந்திய பாரம்பரியத்தின் ஒவ்வொரு வித்தும் தான் இம்மண்ணில் முளைவிடும் முன்னே தெரிந்துகொள்கிறது. அந்த கற்பை தன் உயிரினும் மேலாய் போற்றிப்பாதுகாக்கும் ஓர் மிகப்பெரிய கூட்டமும் இங்கிருக்கின்றது. அப்படிப்பட்ட கூட்டத்தினுள் ஒருத்தி தனது முன்கோபத்தால் தன் உயிரை பறிகொடுத்தபின் சடலமாய் அவள் பட்ட பாடுகளை உங்கள் கண்முண்னே கொஞ்சமாய் கற்பனைகோர்த்து வைக்கிறேன். இக்கதை உங்களுள் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமாயின், அதன் மூலம் நம் நாட்டில் தற்கொலைகள் ஒர் சதவீதமாயினும் தடுக்கப்பாடுமாயின் அது எனது கதைக்கு கிடைத்த வெற்றியாய் நான் கருதுவேன்.
நன்றியுடன்.. இதயா.

நந்திதா என்றொரு சடலம்

அந்த அதிகாலை நேரத்தில் நான் எனது மணைவியோடு நல்ல நித்திரையில் இருந்தபோதுதான் நாராசமாய் என் வீட்டு அழைப்புமணி அலறியது. மெல்ல நினைவு கலைந்த நான் எனக்கு நேரேயிருந்த கடியாரத்தை பார்த்தேன். அது அதிகாலை 4.30 என காட்டியது. அதற்குள் எனது மனைவியும் விழித்துக்கொண்டுவிட்டாள். உடனே என்னைப்பார்த்து," என்னங்க.. யாருன்னு பாருங்களேன்.. "

எனது மனைவியின் வார்த்தைக்கு இதுவரையில் மறுப்பேதும் சொல்லியதில்லை நான். மௌனமாய் எழுந்து நெகிழ்ந்துபோயிருந்த எனது லுங்கியை சரிசெய்தபடி என் இரண்டு வயது அம்முவை பார்த்தேன். அட.. அவளும் விழித்துக்கொண்டுவிட்டாளா... இதோ தன் பொக்கை வாய் காட்டி சிரிக்கிறாள். நானும் அவளைப்பார்த்து சிரித்தேன். மெல்ல நடந்து சென்று என்வீட்டு தாழ் நீக்கிவெளியே யாரென்று பார்த்தேன். வெளியே..

" தொந்தரவுக்கு மன்னிக்கணும் ஸார்... இங்கே ராகவன்னு... "

அதிகாலையில் எழுப்பி மன்னிப்புக்கோரும் தபால்காரன். மெல்ல வியந்தபடி அவனை நோக்கி... " எஸ் . நான்தான்..."

" ஓ நீங்க தானா.. நான் டெலிகிராம் ஆபிஸிலிருந்து வரேன்.. சிதம்பரத்திலிருந்து தந்தி வந்திருக்கு ஸார். இந்த பாரமில் கையெழுத்து வேணும் ஸார்...:"

மெல்ல சிரித்தபடி அவன் காட்டிய பாரமில் கையெழுத்திட்டேன். அவனும் சிரித்தபடி வெளியேறியதும் அவசரம் அவசரமாய் தந்தியை பிரிக்கலானேன். அதை படித்ததும் அந்த அதிகாலையிலும் லேசாய் மயக்கம் வந்தது. அதற்குள் படுக்கையிலிருந்து எழுந்திருந்த அம்புஜம் நான் நிலைதடுமாறுவதை உணர்ந்து ஓடிவந்து என்னை தாங்கினாள். பின் பதற்றமாய்..

" என்னங்க.. தந்தியில என்ன.. "

என்னால் எதுவும் பேச முடியவில்லை. உடலில் ஓர்வித நடுக்கம் ஓட கண்களில் கண்ணீர் திரள ஆரம்பிக்க நான்.. நம்ம நந்தி.. நந்துகுட்டி.. "- அதற்க்குமேல் வார்த்தை வராமல் மெல்ல அம்புஜத்தின் தோள்மீது சாய்ந்து விம்ம ஆரம்பித்தேன்.

அடுத்த ஒருமணி நேரத்திற்குள், மறுபடியும் உறங்க ஆரம்பித்திருந்த அம்முவை எழுப்பி, கலைந்திருந்த துணிமணிகளை ஓர் பைக்குள் அவசரம் அவசரமாய் திணித்து, வீட்டை பூட்டி பக்கத்து வீட்டில் சொல்லிவிட்டு, பேரம் பேசாமல் ஓர் ஆட்டோ பிடித்து பஸ் ஸ்டாண்டை அடைந்து கிளம்புவதற்கு தயாராயிருந்த சிதம்பரம் பேருந்தில் ஏறியமர்ந்து ஜன்னலோரமாய் அமர்ந்துகொண்டாயிற்று. இதோ பேருந்தும் சொல்லிவைத்தாற்போல கிளம்பி ஓட ஆரம்பிக்கிறது. ராகவனின் நினைவுகள் மட்டும் பின்னோக்கி செல்ல ஆரம்பிக்கிறது..

ராகவன் நந்துவை முதன் முதலாய் பார்த்தபோது, அவளுக்கு சரியாய் 7 வயதிருக்கும். ஆளையடித்துப்போடும் அழகுடன், சிகப்பு தேவதையாய் வளைய வந்துகொண்டிருந்தவள் அன்றுமுதல் ராகவனின் மனதில் வளைய ஆரம்பித்தாள். அம்புஜத்தின் தங்கையவள். காலம் தாழ்ந்த பிறப்பாயினும் தெய்வத்தின் பொலிவிருந்தது அவளிடம். அந்த பெண் பார்க்கும் படலத்தின் போது அம்புஜத்தோடு அவளையும் பிடித்துபோனது ராகவனுக்கு.

நந்துவும் வெகு சீக்கிரமே ராகவனோடு ஒட்டிக்கொண்டாள். அவனை ராகவா என அழுத்தம் திருத்தமாய் பெயர் சொல்லி அழைத்தாள். ராகவனும் மறுப்பேதும் சொல்லாது, பதிலுக்கு ரசித்தான். அவளை அள்ளி மார்போடு அனைத்துக்கொண்டான். நந்திதாவின் வயது கூடக்கூட அவளின் அழகும், அறிவும் கூடிக்கோண்டே போனது. அவள் அவளுடைய வீட்டிலிருந்ததை விட, ராகவனின் வீட்டிலிருந்ததே அதிகம். அவளின் மேதிருந்த அதீத பாசம் அவர்களின் புத்திரசோகத்தை அதிகமாய் மறக்கடித்தது. ராகவனின் உயிரோடு உயிராக ஒன்றிப்போனாள் அவள்.

நந்திதாவுக்கு கவிதையில் நாட்டமதிகம். பதின்மூன்று வயதில் ஓர் கவிதை எழுதிவந்து ராகவனிடம் காண்பித்தாள். வியப்பில் விழிமலர்ந்து வாசித்தது இன்னமும் நினைவிருக்கிறது அவனுக்கு.

" இந்த பூக்களுக்கு மட்டும் எங்கிருந்து வந்தன

இந்த வாசனைமகிமைகள்..

இறைவனின் படைப்பில்

விந்தைநிகழ்த்தும் உண்மைகள்..

விதைபிளந்து வேராகி, செடியாகி,

பூப்பூத்துவாசம் வீசும் வசந்தங்கள்..

ஓ ! என் இறைவா..

இனியென் அடுத்த பிறப்பு ,

இந்த வாசம் வீசும் பூக்களில்ஒன்றாயிருக்கட்டும்.. "

"ராகவா இதை படியேன் " - என்றவள் அந்த கவிதையை என்னிடம் கொண்டுவந்து நீட்டியபோது, சிரித்தபடி வாங்கிய நான் படித்துமுடித்ததும் வியப்பிலாழ்ந்துபோனேன். மெல்ல அவளை அருகில் அழைத்து,

" ஆமா எப்போ இந்த கவிதையை எழுதினே.. ரொம்ப நன்னாயிருக்கு. இன்னும் நிறைய எழுதனும் நீ. எழுத எழுதத்தான் எழுத்து புலப்படும். "

இப்படி அந்த இளம் தளிர் அவனுள் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குணத்திலாகட்டும், படிப்பிலாகட்டும், இல்லை நாட்டியத்திலாகட்டும் ஓர்வித நளினமிருந்தது அவளிடம். என்ன சட்டென கோபம் வரும். அவ்வளவுதான். அந்த நேரத்தில் கையில் எது கிடைத்தாலும் அவ்வளவுதான். இடையில் அம்மு பிறந்தாள். அப்போது அவளுக்கு 18 வயது இருக்கும். அம்முவின் மேல் பாசமதிகம் அவளுக்கு. ஒருகணம் கூட அம்முவை தரையில் விடமாட்டாள். விதம் விதமான சேட்டைகள் செய்து, அம்முவின் சிரிப்பில் தானும் கண்ணீர்வர சிரிப்பாள்.

பேரூந்து சிதம்பரத்தை அடைந்ததும், தன்னிலை திரும்பிய ராகவன் பேருந்திலிருந்து இறங்கி இரண்டொரு தெருக்கள் தள்ளியிருந்த தேரடி தெருவுக்காய் ஆட்டோ அழைத்தான். பேரம் பேசாது ஏறிக்கொண்டான். வீடு வந்து சேர்ந்ததும், அத்தை எங்களை எதிர்கொண்டு அழைத்தபடி.. ஆனால் அழாமல், கண்களில் அதீத சோகத்துடன்..

" நந்து.. இப்போ மார்ச்சுவரியில இருக்கா.. அவர்தான் பக்கத்துல இருக்கார்.."

பிசிறு தட்டிய அந்த குரல் ராகவனுக்கு ஆயிரமாயிரம் சோகத்தை சொல்லியது. அதற்குமேல் அங்கு நிற்க மனமில்லாமல் ஆஸ்பத்திரிக்கு ஓடினான் ராகவன். மார்ச்சுவரியின் வாயிலில் கோபாலய்யர் சகலமும் தளர்ந்து போய், மார்ச்சுவரியின் சுவரோரம் ஒண்டியபடி எங்கோ வெறித்தபடியிருந்தவர், ராகவனைப்பார்த்ததும் ஓடிவந்து அவனை அணத்தபடி ஓவென கதற ஆரம்பித்தார்.

" ராகவா.. உம்பொண்ணு போய்ட்டாடா.. நம்ம எல்லாரையும் விட்டுட்டு போய்ட்டாடா.. ஐயோ நான் என்ன பண்ணுவேன்.. பாவி என்னோட சனி நாக்கு இப்போ என் மகளோட உயிரையே பலிபோட்டுடுச்சே.. ஐயோ ராகவா.. "

என் தோள் சாய்ந்து கதறியழும் என் மாமாவை தேற்றத்தோணாது மரமாய் நின்றேன் நான். மனதில் ஆயிரமாயிரம் சூறாவளிகள் சுற்றித்தாக்க.. சற்றே ஆவேசம் வந்தவனாய் கோபாலய்யரின் தோள் நிமிர்த்தி,

" சொல்லுங்கோ .. மாமா.. என் நந்துவை என்ன பண்ணேள்.. " என்னையுமறியாமல்என் கைப்பிடியிறுக கோபாலய்யர் மேலும் துவண்டார். சிறிது நேரம் கழித்து மெல்லியகுரலில்,

" என் குழந்தையை நானே கொண்னுட்டேன் ராகவா. நேத்து சாயந்திரம் ஆறு மணியிருக்கும். அபிஷேகம் எல்லாம் முடிஞ்சி கோயில் நடை சாத்தி வர்ரச்சே.. தெருக்கோடியிலே நம்ம நந்து ஒரு பையனோட சிரிச்சு பேசிண்டிருந்தா.. நான் ஏதும் பேசிக்கலை.. ஆத்துக்கு அவ வந்ததும் வராததுமா.. கொஞ்சம் சத்தமா.. யாருடி அவன்னேன்.. அதுக்கு அவ சிரிச்சுண்டே.. என்கூட படிக்கறவான்னா..அவ சிரிச்சிண்டே பேசினது நேக்கு கோவத்தை தூண்டிடுத்து.. நாக்குல சனி பூந்துண்டிடுத்து.. ஏண்டி உனக்கு வெக்கமாயில்லே.. இருட்டின நேரத்துலே வேத்து மனுஷாளோட நின்னு சிரிச்சு பேசிண்டிருக்கியே.. எம்மானமே போறது.. அப்படின்னேன்.. அவ்வளவுதான்.. நந்து என்னை எரிக்கிற மாதிரி பார்த்தா.. என்னை பார்த்து கையெடுத்து கும்பிட்டு.. இனி என்னாலே உங்களுக்கு எந்த தொந்தரவும் வராதுன்னுட்டு.. ஓடிப்போய் கதவை சாத்திண்டா.. உள்ளே அவ அழற சத்தம் கேட்டிண்டிருந்தது.. நான் கொல்லையிலே ஸ்நானம் பண்ணி முடிஞ்சு வர்ரதுக்குள்ளே பாவி.. இப்படி பண்ணிண்டா..."

கோபாலய்யர் முழுவதும் என் தோள் சாய்ந்து கொண்டார். மனம் முழுதும் பாரமாகிப்போன நான், சற்று நேரம் கழித்து மெல்லிய குரலில்.

" மாமா.. நான் நந்திதாவை பார்க்கணும்."

" ராகவா.. நந்துவை நான் 10 மணிக்கு கொண்டுவந்தேன். அப்பவே உயிர் போயிருக்கும் போல. ஆஸ்பத்திரியில போலீஸ் கேசுன்னு புக் பண்ணிண்டா.. இப்போ போஸ்ட்மார்ட்டம் அது இதுன்னு என்னன்னமோ சொல்றாடா.. நேக்கு பயமா இருக்கு.. ஐயோ. அவளை கூறுபோட்டுத்தான் தருவாளோ.. பூவாட்டம் அவளை வளர்த்தேனே..ராகவா ஏதாச்சும் பண்ணேன்.. என் சொத்து பூராவும் போனாலும் பரவாயில்லை.. "

" சித்த நேரம் இருங்கோ மாமா.. நான் போய் பார்த்துண்டு வரேன்.." என்றபடி அவரிடமிருந்து நகர்ந்தேன் நான்.

நந்திதா.. என் செல்ல நந்து அந்த பிணவறையின் உள்ளே ஏதோ ஓர் நம்பர் கொண்ட பெட்டியின் உள்ளே படுக்கவைக்கப்பட்டிருந்தாள். கூர்க்காவை இன்னும் காணவில்லை. நான் சற்று நேரம் பிணவறையினை வெறித்து பார்த்தபடியிருந்தேன். சற்று நேரத்தில் இன்னுமோர் சடலம்.. அதைத்தாங்கியபடி அதீத சோகத்துடன் சிலர். நான் கொஞ்சமாய் நகர்ந்துகொண்டேன். இதோ... காவலாளியோடு டாக்டரும், கூடவே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும்..

" என்னய்யா இன்னைக்கும் சரக்கா ..."

" இல்லே டாக்டர்.. இன்னைக்கு கேஸ் கொஞ்சம் ஜாஸ்தி. அதான்... "

" எத்தனை ? "

" இப்போ.. உள்ளே போனதோட சேர்த்து மொத்தம் ஆறு.. "

" அதிலே சூசையிடு எத்தனை ? "

" ஒன்னே ஒன்னுதான் டாக்டர்.. நீங்க பார்த்து ஓகேன்னா சீக்கிரமே முடிச்சு அனுப்பிச்சிடுவேன்.. " "சரி சரி கூப்பிடு அந்தாளை " என்றபடி டாக்டரும், இன்ஸ்பெக்டரும் உள்ளே போக, காவலாளி சற்றே கரகரத்த குரலில்,

" யாருப்பா அது சூசையிடு கேசு.. யாராச்சுமிருக்கிங்களா.." என்று சுற்றிலும் பார்வையை ஓடவிட்டவன், ராகவன் வேகவேகமாய் தன்னை நோக்கி வருவதை பார்த்தும் ஓடிப்போய் அவனை சற்றேரக்குறைய தள்ளிக்கொண்டு போகாத குறையாய் போய் மெல்லிய குரலில்,

" இன்னாவோணும் அந்த பொண்ணுக்கு நீ "

" மாமன். என்பேர் ராகவன். ராகவன் ஐயர். "

" ஏம்பா.. எவ்வளோ அழகாகீது அந்த பொண்ணு.. அத்தபோய் சாவவுட்டுட்டிங்களே. சரிசரி ஒரு ஆயிரம் ரூபா ரெடியா வச்சுக்க.. போஸ்ட்மார்ட்டம் இன்னும் அரை அவர்லே முடிச்சு தந்துர்ரேன். "

ராகவன் அதிர்ச்சியின் விளிம்புக்கு போனவனாய்.. " என்ன போஸ்ட்மார்ட்டம் நீங்க பண்ணப்போறேளா? அப்போ டாக்டர் என்ன பண்றார்? "

" தோடா.. இத்தபாரு.. இதேமாதிரி பேசிக்கீனே இருந்தே.. அப்புறம் பாடிய கூட பாக்கமுடியாது நீ. ஆமா சொல்லிபுட்டேன். பாத்தா படிச்சா ளாட்டமா கீறே. தெரிங்சுக்கோ, இங்கே 100 -க்கு 90 சதவீதம் நாங்கதான் பண்றோம். சரிசரி ரவுசு பன்னாமே உள்ளே வா.. டாக்டரும், போலீசு ஐயாவும் ஏற்கனவே உள்ளார போய்ட்டாங்க " என்றபடி உள்ளே செல்லத்துவங்கினான்.

பிணவறை நல்ல குளிர்ச்சியாயிருந்தது. கூடவே அதீத நிசப்தமாயும். ஆத்மாக்கள் அங்கே அதிகமாய் உறங்குகிறதல்லவா. டாக்டர் சரசரவென நடந்துபோய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் ஒன்றை பிடித்திழுக்க, உள்ளேயிருந்து நந்திதாவின் சடலம் வெளிப்பட்டது.

ராகவன் மெல்லமாய் தன் வாய்பொத்திக்கொண்டான். ஏட்டும், காவலாளியும் சேர்ந்து நந்திதாவின் உடலை தூக்கி அருகிகிருந்த மேஜையின் மேல் கிடத்தினார்கள். ஏட்டு தன் பங்கிற்கு வேலையினை துவக்கும் பொருட்டு, நந்திதாவின் புடவையினை காலிலிருந்து சற்றேரக்குறைய தொடைவரை மேலேற்றினார். பார்வையை உன்னிப்பாக்கி ஏதாகிலும் மச்சம், மற்ற அடையாளங்கள் தெரிகின்றனவாவென பார்க்க ஆரம்பித்தார். இத்தனையும் பார்த்துக்கொண்டுருந்த ராகவனின் நரம்புகள் புடைத்துக்கொள்ள ஆரம்பித்தன. சற்றே ஆவேசம் வந்தவனாய்,

" ஸார்.. நீங்க பன்றது அநாகரீகம்... "

என் பேச்சைக்கேட்டு சடாரென என் பக்கம் திரும்பிய ஏட்டு,

" யோவ் .. ஐயரே.. சும்மா கத்தாதேய்யா.. எவ்வளவு வெக்கப்படற நீ, புள்ளைய ஏன் சாவ வுட்டே.. பாக்க லட்சுமியாட்டமாயிருக்க.. எனக்கும் ரெண்டு பொண்ணிருக்கு.. டூட்டி.. தெரிஞ்சுக்கோ..சும்மா கத்தினா. ரேப் கேசுன்னு புக் பண்ணி பாடியை பத்து நாளைக்கு பாக்கவிடாமே பண்ணிடுவேன்.. இவனுங்க வேற.. காலங்காத்தாலே..மூடை அவுட்டாக்கறதுக்கின்னு.. " விழியிரண்டும் நெருப்புக்கோளங்களாய் மாறியவர் கத்தத்தொடங்க, ராகவன் சகலமும் ஒடுங்கி மார்ச்சுவரியின் ஓரமாய் ஒதுங்கினான்.

அதற்கப்புறம், காவலாளி நந்திதாவின் உடலிலுள்ள ஆடைகளை களைந்தது, பின் முழு நிர்வானமான உடலை டாக்டர் நெருங்கி ஆராய்ந்து , அது சூசையிடுதான் என உறுதி செய்துகொண்டதும் ஏதோவொரு பாரமில் அவரும், ஏட்டும் கையெழுத்திட்டதும், அவன் காத்திருந்ததுபோல நந்திதாவின் நான்கடி கூந்தலை முழுவதுமாய் மழித்து மொட்டையாக்கியது, பின் கனமான சுத்தியல் கொண்டு கபாலம் பிளந்தது,பின் உள்ளிருந்தவைகளை ஓர் பாட்டிலில் போட்டது, அடிவயிறு தொடங்கி நெஞ்சுவரை கூர்மையான கத்திகொண்டு கிழித்து உள்ளிருந்தவகளை வெளியே தூக்கி போட்டது வரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த ராகவன் அதற்குமேலும் பார்க்கச் சகிக்காமல் கண்கள் செருக, குமட்டலுடன் கதவு திறந்து ஓடி அருகிலிருந்த ஓர்மர நிழலின் ஓரமாய் ஒதுங்கி நின்று..

" உவ்வே... உவ்வே... "

அடுத்த அரைமணி நேரத்திற்குள் சகலமும் முடிந்து, ஒரு பஞ்சுப்பொதியாய், வெள்ளைத்துணி போர்த்தப்பட்ட ஓர் வெள்ளை தேவதையாய் நந்திதாவின் சடலம் வேனில் ஏற்றப்பட்டது. மளமளவென சம்பிரதாயங்கள் முடிக்கப்பட்டு.. இதோ...ஆயிற்று. நந்திதாவெனும் ஓர் அற்புத பூ இந்த பூமிக்குள் குடிகொண்டாயிற்று. சுற்றமும் கூட சொல்லிக்கொல்லாமல் போயாயிற்று. ராகவன் மட்டும் தனியே நந்திதாவின் கல்லறைக்கு சென்று பூ வைத்துவிட்டு வந்தான். நந்திதாவின் கல்லறையெங்கும் பூவாசமுணர்ந்தான். ஏனோ வாய்மூடியழுதான். பின் அங்கிருந்து கிளம்பி விருவிருவென நடந்து வீடுவந்து சேர்ந்து மளமளவென கிளம்ப ஆரம்பித்தான். ராகவன் கிளம்புவதைப் பார்த்ததும் கோபாலய்யர் பதைபதைத்தபடி ஓடிவந்து ராகவன் கைபற்றி,

" என்ன ராகவா.. நீயும் எங்களை விட்டுட்டு போறியாடா.. "

ராகவன் அமைதியாய், அதே சமயம் வெகு தீர்க்கமாய் கோபாலய்யரை பார்த்து,

" ஆமாம் மாமா.. நான் போறேன். என்னை மன்னிச்சிடுங்கோ.. இனி என்னாலே இங்கேயிருக்க முடியுமின்னு தோணலை..இனி நான் இங்கு வரமாட்டேன்.. நேக்கு வேற வழி தோணலை.. தெரிஞ்சோ, தெரியாமலோ ஓரு தேவதையை பறிகொடுத்துட்டு பட்டமரமா நிக்கிறோம்.. காரணம் அவளோட முன்கோபம். அது இப்போ நம்ம குடும்பத்தியே பொசுக்கிடுத்து..கண்திறந்தா என்னோட நந்திதா நிக்கிறா.. என்னையிப்படி கூறுபோட விட்டுட்டீங்களேன்னு என் மூஞ்சியபார்த்து கேக்கறா.. மார்ச்சுவரியிலே அவபட்ட பாட்டை நீங்க பாக்கலை மாமா.. செத்துப்போயிடலாமுன்னு தோணித்து நேக்கு.. கற்புக்குன்னு ஓர் மரியாதை நம்ம கலாச்சாரத்திலே இருக்கு.. சேலைநுனி கொஞ்சம் விலகினால் கூட பதறிப்போய் முந்தானையிழுத்து செருகும் கூட்டத்திலிருந்து வர்ரவாளோட கற்பு இந்தமாதிரி தற்கொலைகளினால் முழுவதுமாய் காப்பாத்தப்படலை. நேரிலிருந்து பாத்தவன்ற முறையிலே சொல்றேன். ஆண்டவன்கிட்டே நான் வேண்டிக்கிறதெல்லாம் இனி தற்கொலைகள் இங்கே தவிர்க்கப்படனும். காலம் காலமாய் பொத்திப்பாதுகாத்த கற்பை அங்கே கூறுபோட்டு விக்கிறா மாமா.. அவாளை சொல்லி குத்தமில்லே..அவாளை பொருத்தவரைக்கு வேலை. ஆனா நமக்கு கலாச்சாரம். இனி நான் இங்கே வருவேன்னு நேக்கு தோணலை மாமா.. முடிஞ்சா எல்லாத்தையும் முடிச்சுண்டு நீங்களும் அங்கேயே வந்துடுங்கோ..இந்த வீடுவேணாம். பூஜை, புணஸ்காரம் எதுவும் நமக்கு வேணாம். என் வீட்டு வாசல் உங்களுக்காக எப்பவும் திறந்தேயிருக்கும்..எங்களை மன்னிச்சிடுங்கோ.. வரேன்.. "

ராகவன் உறங்கிக்கொண்டிருந்த அம்முவை இல்லையில்லை நந்துவை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டான். தோள் பேக்கை தனது இன்னொரு தோளில் மாட்டிக்கொண்டான். பங்கஜத்தின் கைபிடித்து மெல்லமாய் நடந்து கூடம் தாண்டி வாயிற்பக்கம் செல்ல ஆரம்பித்தான்.

உணர்வும் ஆக்கமும் :

இதயா@இரமேஷ் .Tஎண் 6-A, கோட்டை ஸ்டேஷன் ரோடு,திருச்சி - 620 002. மின்னஞ்சல் - idhayaa@hotmail.com



அம்மா

அம்மா

ஊர் கூடி சூளுரைத்த போது,
ஒரு மனதாய் எதிர்த்து நின்றாய் !...
பொல்லாற்கு அஞ்சேல் என - என்
முகம் பார்த்து போதித்தாய் !...
பின்னாளில் ஊர் போற்றும் பெரியோனாய்
போன என்னை பார்த்து பார்த்து பூரித்தாய் !..
பதவி பிரித்த உன்னை ஓடி வந்து
பார்த்த போது, அம்மா நீ உயிர் பொய் விட்டிருந்தாய் !....
உன் நினைவு தாக்கத்தில் இருந்து தப்பி கொள்ள நான்,
என் மனையாள் மடி சரிந்து ,
என் அலுவலக நேரம் கூட்டி ,
கண்களில் நீர் சுமந்து கசிந்துருகி ,
அத்துனையிலும் அம்மா உன் முகம் கண்டு நான்
கலங்கும் போதெல்லாம் மாலை போட்ட
முகம் காட்டி சிரிக்கின்றாய் !.....
உனக்காய் என் புரிதல்கள் அத்துனையும்
அம்மா உன் புன்னகை முன் எம்மாத்திரம் !..
ஆண்டவன் படைத்திட்ட அற்புதம் அம்மா நீ !....
உயிர் போகும் வேளையில்
உன் நெஞ்சுக்குழி சொல்லிற்றா ?
உன் மகன் நல்லவனென .....?????????
**********************

Tuesday, December 16, 2008

கண்ணாடி


கண்ணாடி !
இத்தனை நாள் என்
முகம் காட்டிய கண்ணாடி
கை தவறி போனது !..
நினைவு தெரிந்த நாள் முதலாய்
என் முகம் காட்டி வந்திருக்கிறது !..
அத்துனையும் சுக்கல் சுக்கலாய்...
உடைந்த துண்டுகளை நான்
மனது பொறாமல் சற்றே
ஒட்டி வைத்து பார்க்கிறேன் !....
அத்துனையிலும் என் முகங்கள் !
ஒன்றில் பாலகனாய் ...
ஒன்றில் பருவதினனாய் ......
ஒன்றில் வயோதிகனாய் ....
ஒன்றில் இப்போதிறந்த சவத்தினனாய் ....
சற்றே உற்று பார்க்கிறேன் !..
ஒட்டி வைத்த துண்டுகள் என் முன்
பரிகாசித்து சிரித்தன சற்றே பின வாசனையுடன் ...
சற்றே திகைத்து பின்வாங்கி தோற்கிறேன் ...
இது தான் என் முகமோ ?....
ஓவென்ற ஒன்காரதினுடே என் மனது
மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தது ...
இன்னும் ஒரு கண்ணாடி வாங்கி விடேன் .....
**********************

பயணம்







பயணம் !
புகை வண்டியினை
போலாகி விட்டது வாழ்க்கையும் !..
தொடர்ந்து வரும் பெட்டியினை போல ,
சொந்தமும், பிள்ளை குட்டிகளும் !...
பயன்பட்டு கொண்டே இருக்கிறது
என் வாழ்க்கையும் .....
நீண்ட நெடு தண்டவாளமாய் ,
என் ஆசைகளும் , எதிர் காலமும் !....
தொலைந்து போன உறவுகளை
நிகழ் கால நிறுத்தங்களில் ,
தேடி அலைகிறது மனம் !....
ஆயினும் மறுபதற்கில்லை ,
வாழ்வில் வரும் சின்ன சின்ன வசந்தகளை ....
நெடும் தூரம் பயணப்பட்ட
இளசுகளை போல ........
*****************************

Tuesday, December 9, 2008

தோழி



* இங்கு தான் எங்கோ இருக்கிறாள்
என் பிரிய சக தோழி !..
மனமெங்கும் தேன் பூசிய
அந்த வெள்ளை கிழவி

* தேடினால் கிடைத்து கொள்வாள் ....
எனை பற்றி எப்போதாகிலும்
நினைத்து கொள்வாள் போலும்
எனக்கு மட்டும் ஏனோ அடிக்கடி புரை ஏறும் !..

* தேடினால் கிடைத்து கொள்வாள் ....
நாடி தளரும் வேலையிலும் ,
நட்பு நாடும் மனம். ..
என்ன ...
நாடி கொஞ்சம் தளர்ந்திருக்கும் ....
உடலெங்கும் வெண் பூக்கள் அரும்பி இருக்கும் ...

* தேடினால் கிடைத்து கொள்வாள் ....
என் பிரிய சக தோழி !..
மறுபடி மறுபடி மனதுக்குள்
வந்து மழை பெய்து போனவள்..
போனவள் தான் ...

* தேடினால் கிடைத்து கொள்வாள் ....
உயிரறுத்து போனவள் ஓர் நாள்
தன் துணையோடு வந்து சொன்னால் ,
" எனை தொல்லை படுத்தாதே - என்
இனிய பிரிதிவி ராஜா ........."